மோடி என்ன அவரது தாத்தாவை கூட சந்திப்பேன் : நாராயணசாமி ஆவேசம்
சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க கிரண்பேடி மூலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசுக்கு அவர் மூலமாகப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதையெல்லாம் தாண்டி ஐந்தாண்டுக் கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறேன். பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் மிரட்டி ஆட்சி கவிழ்ப்பு வேலையைச் செய்திருப்பது அசிங்கமாக உள்ளது.
இந்த ஆட்சி கவிழ்ப்பு சதியில் அதிமுகவும் துணை போயிருக்கிறது என்பது வெட்கக்கேடாக உள்ளது.புதுச்சேரி மாநிலம் பல்வேறு துறைகளிலும் மக்களுக்கான திட்டங்களைக் கொடுத்துள்ளதை மத்திய அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.மோடியைப் பார்த்து எனக்கு ஒருபோதும் அச்சமில்லை, மோடியும் சந்திப்பேன் அவரது தாத்தாவையும் சந்திப்பேன், என்னைப்பற்றி மோடிக்கு நன்றாகத் தெரியும், நான் ஊழல் செய்யாதவன், நாராயணசாமி ஊழல் செய்தார் என்று நிரூபிக்க முடியுமா?விளம்பரங்கள் மற்றும் இலவசங்கள் மூலமாக ஆட்சியை பிடித்து விடலாம் என தமிழகத்தில் அதிமுக எண்ணுகிறது.அது ஒருபோதும் நடக்காது. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுபவர்களுக்குத் தான் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதை அதிமுக உணரவில்லை. தமிழகத்தில் கடன் சுமை அதிகரிக்க அதிமுக அரசின் நிர்வாகத் திறமை இன்மையே காரணம்.என்றார்.