புரட்சி வெடிக்கும்... மோடிக்கு ஐஎம்எப் தலைவர் எச்சரிக்கை!

கத்துவா, உன்னாவ் சம்பவங்களை அடுத்தாவது, நநேந்திர மோடி அரசும் அவரது அதிகாரிகளும் பெண்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (International Monetary Fund) தலைவர் கிறிஸ்டின் லகார்டே கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள பெண்கள் நலனில் அதிகமான அக்கறை காட்டவேண்டும் என்றும், பெண்களின் புரட்சி வெடிக்கும் சூழல் நிலவுகிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக கிறிஸ்டியன் லகார்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் என்ன நடக்கிறது? காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் அருவருப்பானதாக உள்ளது.

இந்தியாவில் பெண்கள் நலனுக்காக பெரும் புரட்சியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் அனைத்து அதிகாரிகளும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பாக, பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் இந்திய பெண்களுக்கு பாதுகாப்பு தேவை. இப்போதுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம். கடந்த பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தேன். அப்போது, இந்தியாவில் உள்ள பெண்கள் குறித்து அதிகமான விஷயங்கள் ஏதும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து பிரதமர் மோடியிடம் குறிப்பிட்டுப் பேசினேன். இதை ஒரு கேள்வியாக நான் அவரிடம் கேட்கவில்லை, மாறாக எனது கருத்தை தெரிவித்தேன். இப்போது, நான் தெரிவிக்கும் இந்த வருத்தமும், அறிவுறுத்தலும் கூட ஐ.எம்.எப் தலைவராகக் கூறவில்லை. ஒரு சர்வதேச செலாவணி நிதியத்தின் உத்தியோகப்பூர்வ நிலையும் இதுவல்ல. இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>