கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானாவில் உருமாறிய 2 கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவல்
கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் 2 புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் தான் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,584 புதிய கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 78 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,463 ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் தான் அதிகமாகும்.
இதனால் இந்த 5 மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் உள் அரங்கம் மற்றும் திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்சமாக 100 பேரும், திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்சமாக 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் புதிய இரண்டு வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் கூறுகையில், N 440K மற்றும் E484K என்ற இந்த 2 உருமாறிய கொரோனா வைரஸ் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்துகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நோய் பரவலுக்கு இந்த வைரஸ் தான் காரணமா என்று கூற முடியாது என்று கூறினார். இதற்கிடையே இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.