பணம் வாங்கி மோசடி நடிகை சன்னி லியோனின் முன் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கேரளா மற்றும் பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது கேரளாவில் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சன்னி லியோன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 8ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.பாலிவுட் அதிரடி கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தன்னுடைய கணவர் ஹெப்பர் மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த மாதம் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றார். ஒரு மலையாள தனியார் டிவி நடத்தும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

இந்நிலையில் சன்னி லியோன் மீது ஒரு பரபரப்பு பண மோசடி புகார் கூறப்பட்டது. கேரளா மற்றும் பல்வேறு நாடுகளில் காதலர் தின நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகக் கூறி 30 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாகக் கேரள மாநிலம் பெரும்பாவூர் என்ற இடத்தை சேர்ந்த ஷியாஸ் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடிகை சன்னி லியோனிடம் விசாரணை நடத்தினர். பணமோசடி புகார் தொடர்பாக நடிகை சன்னி லியோனிடம் போலீசார் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது, தான் பணம் வாங்கியது உண்மை தான் என்றும், நிகழ்ச்சி நடத்தப்படாததால் தான் அதில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் போலீசில் கூறினார்.இதற்கிடையே அவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், தன் மீது புகார் கூறியுள்ள ஷியாசுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால், இந்த புகாரின் பேரில் போலீசார் தன்னை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனு மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது நடிகை சன்னி லியோனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று ஷியாசின் வழக்கறிஞர் கூறினார்.

மேலும் சன்னி லியோன் விசாரணை அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெறாமல் இந்தியாவை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், அவரது பாஸ்போர்ட்டை வாங்கி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் விசாரணையை மார்ச் 8ம் தேதிக்குத் தள்ளி வைத்தது. விசாரணை அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் விசாரணைக்குச் சன்னி லியோன் ஆஜராவார் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

More News >>