கேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் கேரளாவில் தொடர்பின் மூலம் ஒருவருக்குப் பரவியது. தற்போது பரவி வரும் வைரசை விட இந்த உருமாறிய வைரஸ் 70 சதவீதம் வேகத்தில் பரவும் என்பதால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் நோய் பரவல் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை அந்தந்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நேற்றும் கேரளாவில் புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று 4,034 பேருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 3,674 பேருக்கும் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. 258 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வந்த 81 பேருக்கு நோய் பரவியுள்ளது. சிகிச்சையில் இருந்த 14 பேர் மரணமடைந்தனர்.
இதையடுத்து இதுவரை கேரளாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,119 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே கேரளாவில் இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பின் மூலம் ஒருவருக்குப் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கேரளாவில் இந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 பேர் இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் ஆவர். கோழிக்கோட்டைச் சேர்ந்த 72 வயதான ஒருவருக்கு இந்த நோய் தொடர்பின் மூலம் பரவியுள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்த உருமாறிய வைரஸ் பாதித்த ஒருவருடன் இவர் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே பரவி வரும் வைரசை விட 70 சதவீதம் வேகத்தில் பரவும் என்பதால் கேரளாவில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.