கேரளாவில் மீனவர்களுடன் கடலுக்கு சென்று வலை வீசி மீன் பிடித்த ராகுல் காந்தி
கேரளாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் ராகுல் காந்தி, இன்று அதிகாலை மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் கடலுக்கு சென்று வலைவீசி மீன் பிடித்தார். பின்னர் அவர் மீனவர்கள் சமைத்துக் கொடுத்த மீனை ருசித்துச் சாப்பிட்டார்.காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்னோடியாகக் கேரளாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் தன் சொந்த தொகுதியான வயநாட்டில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் நேற்று மாலை திருவனந்தபுரம் வந்த வந்த இவர் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயனையும், கேரள அரசையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். சிபிஎம் கட்சிக் கொடி இருந்தால் முதல்வர் அலுவலகத்தில் இருந்தபடியே தங்கம் கடத்தலாம் என்றார். இதன் பின்னர் அரசு வேலை கேட்டு திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்தி வருபவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இன்று அதிகாலை ராகுல் காந்தி கொல்லத்தில் மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் கடலுக்குச் சென்று வலைவீசி மீன் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
இன்று அதிகாலை 5 மணியளவில் ராகுல் காந்தி கொல்லத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் மீனவர்களுடன் கடலுக்குச் சென்றார். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் கடலில் அவர் மீனவர்களுடன் சேர்ந்து வலைவீசி மீன் பிடித்தார். நடுக்கடலில் வைத்து மீனவர்கள் சமைத்துக் கொடுத்த மீனையும் அவர் ருசித்துச் சாப்பிட்டார். அதன் பின்னர் கொல்லத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியது: நாங்கள் இன்று கடலுக்குச் சென்று வலை விரித்தோம். அப்போது வலையில் ஏராளமான மீன்கள் சிக்கும் என நான் கருதினேன். ஆனால் வலை விரித்த போது அதில் சிறிதளவு தான் மீன்கள் இருந்தன. அப்போது தான் மீனவர்கள் படும் துன்பத்தை நான் புரிந்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் இது ஒரு புதிய அனுபவம் ஆகும். மீனவர்கள் தங்களது வாழ்க்கையில் மிகுந்த சிரமப்படுவதை நான் நேரடியாகப் புரிந்து கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.