கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் வழக்குகளை வாபஸ் பெற முடிவு
கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை 10 முதல் 50 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சபரிமலையில் 10க்கும் 50க்கும் இடைப்பட்ட இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கேரளாவில் பாஜக, ஆர்எஸ்எஸ் உட்பட இந்து அமைப்புகளும், நாயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பகுதிகளில் இந்த போராட்டத்தால் பயங்கர வன்முறை வெடித்தது. பல பகுதிகளில் தடியடியும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இது தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சபரிமலை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நாயர் சமுதாய அமைப்பு சமீபத்தில் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட சாதாரண வழக்குகளை ரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இதே போலக் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.