கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கு 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடு
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து செல்பவர்களுக்கு மகாராஷ்டிரா, டெல்லி உள்பட 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் ஆனவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.இந்தியாவில் தற்போது கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் தான் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சற்று அதிக அளவில் உள்ளது. எனவே இந்த மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த 5 மாநிலங்களில் குறிப்பாகக் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் நோய் பரவல் அதிகமாக இருக்கிறது. கர்நாடக மாநிலத்திலும் தற்போது கடந்த சில தினங்களாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. நேற்று 4,037 பேருக்குப் புதிதாக வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிரக் கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவர் மூலம் 72 வயதான ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து டெல்லி, கர்நாடகா, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் விமானம், ரயில் மற்றும் பஸ்கள் மூலம் செல்பவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். டெல்லியில் வரும் 26ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.