டி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி
கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல் காந்தி மீனவர்களுடன் படகில் ஒன்றாக கடலுக்குச் சென்று வலை வீசி மீன் பிடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது திடீரென தன்னுடைய டி சர்ட்டை கழட்டி அவர் கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.கேரளாவில் உள்ள வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி என்பதால் அடிக்கடி இவர் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி கேரளா வந்துள்ளார். பொதுவாக இவர் எங்குச் சென்றாலும் அங்குள்ள மக்களிடம் மிகவும் சகஜமாகப் பழகுவார்.
இதே போலத் தான் இன்று அவர் கொல்லத்தில் மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் பயணம் செய்து வலை வீசி மீன் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது கடலில் வைத்து மீனவர்கள் சமைத்துக் கொடுத்து மீனையும் அவர் ருசித்துச் சாப்பிட்டார். இந்நிலையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென ராகுல் காந்தி தன்னுடைய டி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து அவர் சென்ற படகின் உரிமையாளர் பிஜு என்பவர் கூறியது: ராகுல் காந்தி கடலில் எங்களுடன் சுமார் 3 மணி நேரம் செலவழித்தார். இதற்காக இன்று அதிகாலை 4 மணிக்கே அவர் கடற்கரையில் தயாராக இருந்தார். நாங்கள் சமைத்துக் கொடுத்த மீனையும் அவர் ருசித்துச் சாப்பிட்டார். மீனவர்களிடம் அவர் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் மிகவும் சகஜமாகப் பழகியது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்து சில மீனவர்கள் கடலில் குதித்தனர். அப்போது எதற்காக மீனவர்கள் கடலில் குதித்தனர் என்று என்னிடம் அவர் கேட்டார். வலையில் இருக்கும் மீன்கள் சில சமயம் கடலுக்குள் சென்று விடும். அதற்காக வலையை இழுப்பதற்காகக் கடலில் குதித்துள்ளனர் என்று கூறினேன். நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன் என்று கூறிய ராகுல் காந்தி, திடீரென தன் டி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்தார். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடலில் அவர் நன்றாக நீந்தினார். படகில் வந்த போது எங்களது குடும்பத்தைக் குறித்தும் அவர் கேட்டறிந்தார். நான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன் தான். ஆனாலும் ராகுல் காந்தியைப் போல ஒரு தலைவர் முன் எந்த அரசியலுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.