மணல் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மணல் கடத்தலைத் தடுக்க நீதிமன்ற உத்தரவுகளைக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா நெறிஞ்சிக்குடி, சேரனூர், சித்தூர், கூடலூர், கார சூராம்பட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் இணைந்து மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி சுந்தரேஷுக்கு, கடிதம் அனுப்பினர்.அதனடிப்படையில், நீதிமன்றம் தாமாக முன் வந்து இதைப் பொதுநல வழக்காக விசாரித்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி , ஹேமலதா அமர்வு,"தமிழகத்தில் மணல் கடத்தலைத் தடுப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவை , கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். தமிழக தலைமைச் செயலர் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி இந்த விவகாரத்தைக் கண்காணிக்க வேண்டும். இது இயற்கை வள ஆதாரம் தொடர்பான விவகாரம். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் மணல் கடத்தலைத் தடுப்பது தொடர்பாக வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அதனடிப்படையில் தலைமைச் செயலர் இன்னும் 4 வாரத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

More News >>