நாம் இருவர், நமக்கு இருவர்.. மோடி மீது ராகுல் கடும்தாக்கு..

அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதற்கு ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 1983-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதை இடித்து விட்டு தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டியுள்ளனர். 63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.800 கோடி செலவில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கலாம். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பங்கேற்று மைதானத்தைத் திறந்து வைத்தார். விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு, ஸ்டேடியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், மைதானத்தில் ஒரு முனை அதானி முனை என்றும், இன்னொரு முனை ரிலையன்ஸ் முனை என்றும் பெயர் சூட்டப்பட்டது.இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும், குஜராத் தொழிலதிபர்களான அம்பானி மற்றும் அதானிக்குத்தான் அனைத்து சலுகைகளையும் அளிக்கிறார்கள். நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கோஷத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள் என்று ஏற்கனவே ராகுல்காந்தி பல முறை விமர்சித்திருக்கிறார்.இந்நிலையில், கிரிக்கெட் மைதானத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதையும் அவர் விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், எவ்வளவு அழகாக உண்மை வெளிவந்திருக்கிறது. நரேந்திர மோடி ஸ்டேடியம், அதானி முனை, ரிலையன்ஸ் முனை. ஹம் தோ, ஹமாரே தோ. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>