கொரோனா பரவல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஊட்டி செல்ல கடும் நிபந்தனை
கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாகக் கேரளாவில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இதனால் கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் கேரளாவிலிருந்து செல்பவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களுக்கு விமானம், ரயில் மற்றும் சாலை வழியாகச் செல்பவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்று இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள எல்லைப் பகுதியிலுள்ள சில சாலைகள் மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திற்குக் கேரள மக்கள் வரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகையில் நடைபெற்ற மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசன்ட் திவ்யா கூறுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரளா மாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கட்டாயமாக கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்றார்.கொரோனா பரிசோதனை சான்றிதழ் இன்றி அவசர சூழ்நிலை காரணமாக வருவோரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், நீலகிரி மாவட்டத்தில் கேரள எல்லையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்திற்கு வர இ பதிவு கட்டாயம் தேவை என்றும் கூறினார்.