நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ஒருவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்திற்கு காரில் செல்லும் போது வழியில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அந்த நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில் குமார் என்பவர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டியது மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் திலீப் எனத் தெரியவந்தது.
இதையடுத்து நடிகர் திலீப்பையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவரை போலீசார் 8வது குற்றவாளியாகச் சேர்த்திருந்தனர். 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் இவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்லக் கூடாது, சாட்சிகளை மிரட்டக் கூடாது என்பன உள்படப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.இந்நிலையில் நடிகர் திலீப், இந்த வழக்கில் தொடர்புடைய சில சாட்சிகளை மிரட்டியதாகப் புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய விபின் லால் என்பவரை நடிகர் திலீப்பின் நண்பரும், நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளரான பிரதீப் குமார் என்பவர் மிரட்டியதாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக பிரதீப் குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து ஜாமீன் நிபந்தனைகளை மீறிய நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்பு சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாக இந்த மனு மீது விசாரணை நடந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி ஹனி வர்கீஸ் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இந்த வழக்கை விசாரிக்கும் போலீசாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.