இந்தியா முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஜோ ரூட்டுக்கு 5 விக்கெட்டுகள்
இங்கிலாந்தை போல இந்திய அணிக்கும் இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 145 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாக பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார்.புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது என முதல் நாளிலேயே தெரிந்து விட்டது. 3வது டெஸ்ட் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே இங்கிலாந்து 48.4 ஓவர்களில் 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் 9 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இங்கிலாந்து அணியில் ஜேக் லீச் மட்டுமே சுழல் பந்து வீச்சாளராக உள்ளார். ஜோ ரூட் அவ்வப்போது பந்து வீசுவார். நேற்று வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக் லீச் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய 5 பேரும் பந்து வீசினர்.
சுப்மான் கில் 11 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்திலும், புஜாரா வந்த வேகத்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஜேக் லீச்சின் பந்திலும், விராட் கோஹ்லி 27 ரன்களில் ஜேக் லீச்சின் பந்திலும் ஆட்டமிழந்தனர். நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா அரைசதம் அடித்து 57 ரன்களுடனும், ரகானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய உடன் இந்திய வீரர்கள், ஜேக் லீச் மற்றும் பார்ட் டைம் பவுலரான இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தொடங்கினர். இந்தியா 145 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரகானே 7 ரன்களிலும், ரோகித் சர்மா 66 ரன்களிலும், ரிஷப் பந்த் ஒரு ரன்னிலும், அஷ்வின் 17 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், பும்ரா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இஷாந்த் சர்மா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக பந்துவீசி 6.2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது இங்கிலாந்தை விட இந்தியா 33 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இதன் பின்னர் இங்கிலாந்து தங்களுடைய 2வது இன்னிங்சை தொடங்கி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு இந்த இன்னிங்சில் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கடும் காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சிப்லியும் களமிறங்கினர். முதல் ஓவரை அக்சர் படேல் வீசினார். முதல் பந்திலேயே கிராலே கிளீன் போல்டாகி வெளியேறினார். இதையடுத்து ரன் எடுப்பதற்குள்ளேயே இங்கிலாந்து முதல் விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் பேர்ஸ்டோ களமிறங்கினார். அவரும் வந்த வேகத்திலேயே அக்சர் படேல் பந்தில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது.