கேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல்
கேரள, கர்நாடகா எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை அயோத்தியா நகரில் மாவட்ட அளவிலான காச நோய் கணக்கெடுக்கும் பணியைத் தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை, தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து இந்த கணக்கெடுப்பைத் தொடங்கி உள்ளது.
இந்தக் காசநோய் கணக்கெடுப்பு குழு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளிலும் கண்டறியப்பட்ட காச நோயாளிகள் மற்றும் புதிதாக நோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்களை வாகனங்கள் மூலம் சுழற்சி முறையில் கணக்கெடுத்து நோய்த் தடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது: காசநோய் குணப்படுத்தக்கூடிய நோயாகும். மக்கள் அலட்சியம் காட்டாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
கேரளா, மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மக்கள் அதைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. தமிழக எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள- தமிழக எல்லைகளில் மட்டும் 26 இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளதை உறுதி செய்ய துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.