பெட்ரோலுக்கு கடன் கேட்டு வங்கியில் இளைஞர்கள் மனு

பெட்ரோல் டீசலக்கான வரியை மத்திய மாநில அரசுகள் உயர்த்தியதால் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மற்ற பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது .பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று கார் வாங்கக் கடன் வேண்டாம். பெட்ரோல் வாங்க கடன் கொடுங்கள் என்று வங்கிகளில் வடிவேலு கேட்பதுபோல உள்ள மீம்ஸ் மிகப் பிரபலமாகி வருகிறது.

இதை நிஜமாக்கும் சம்பவம் ஒன்று தேனியில் நடந்துள்ளது. தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாணவரணி சார்பாக இளைஞர்கள் சிலர் தேனி அல்லிநகரம் கனரா வங்கிக்கு சென்று வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கும், சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கும் வங்கி கடன் வழங்க வேண்டும் என வங்கி மேலாளரிடம் மனு அளித்தனர்.மனுவைப் பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள் இப்போதைக்குச் சாத்தியமில்லை இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்துச் சொல்கிறோம் என்று சமாளித்து வந்தவர்களை அனுப்பிவைத்தனர்.

More News >>