14ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 14,000 கோடி மோசடி செய்த பின்னர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல ரத்தின வியாபாரியான நீரவ் மோடி (49) போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 14 ஆயிரம் கோடி மோசடி செய்தது கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே இவர் ரகசியமாக லண்டனுக்குத் தப்பி ஓடினார். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் நீரவ் மோடி தன்னுடைய மாமா மெஹல் சோக்சியுடன் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐ நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசுக்கு சிபிஐ தகவல் தெரிவித்தது. இதையடுத்து லண்டன் போலீசார் அவரை கைது செய்து அங்குள்ள வான்ட்ஸ்வர்த் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணையின் போது, இந்தியாவுக்குத் தன்னை நாடு கடத்தினால் நீதி கிடைக்காது என்றும், தற்போதைய கொரோனா கால கட்டத்தில் தனக்கு பெரும் சிரமங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட் சாமுவேல் கூஸ், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டார். மாஜிஸ்திரேட் கூறுகையில், நீரவ் மோடி ஒரு குற்றவாளி என்பதற்கு ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடு கடத்தினால் அவருக்கு நீதி கிடைக்காது என்று கூறுவதை ஏற்க முடியாது. இவர் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து பெருமளவு மோசடி செய்துள்ளார். இவர் நிழல் நிறுவனங்களை நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். முதல் கட்ட விசாரணையில் இவரது மோசடி நிரூபிக்கப்பட்டுள்ளது. என்று நீதிபதி கூறினார். லண்டன் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு நடத்தி வந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது.

More News >>