இரண்டாவது நாளிலேயே ஆட்டம் முடிந்தது இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்தைப் போலவே புதிய சாதனை படைத்துள்ளது. போட்டி தொடங்கிய 2வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அக்சர் படேல் மற்றும் அஷ்வினின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவும் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. 2வது இன்னிங்சிலும் அதே நிலை தான் காணப்பட்டது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய அக்சர் படேல் இந்த இன்னிங்சில் இங்கிலாந்தின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 81 ரன்களிலேயே இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதனால் 49 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டினர். இதையடுத்து இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 25 ரன்களுடனும், சுப்மான் கில் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டி 2வது நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் அக்சர் படேல் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.