சென்னை ரயிலில் பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.சென்னை- மங்களூரு இடையே தினசரி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினமும் சென்னையிலிருந்து மாலையில் புறப்பட்டு மறுநாள் காலை மங்களூருவை அடையும்.
இந்நிலையில் இன்று அதிகாலை இந்த ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது கோழிக்கோடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் ரயிலில் ஏறி வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் டி1 பெட்டியில் சோதனை நடத்திய போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பேக் காணப்பட்டது. அந்த இருக்கையில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருந்தார். அவரிடம் அந்த பேக் யாருடையது என போலீசார் கேட்டபோது தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் பேக்கை திறந்து பரிசோதித்த போது அதில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.அந்த பேக்கில் சக்திவாய்ந்த 350 டெட்டனேட்டர்கள் மற்றும் 117 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. இதையடுத்து அந்த பைக்கை கைப்பற்றிய போலீசார் அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அந்தப் பெண் சென்னையைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அந்தப் பெண் கண்ணூர் தலச்சேரிக்கு டிக்கெட் எடுத்திருந்தார். அவர் தான் வெடிபொருளைக் கடத்தினாரா என்பது தெரியவில்லை. விசாரணைக்குப் பின்னரே கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று கோழிக்கோடு ரயில்வே போலீசார் தெரிவித்தனர். ரயிலில் பயங்கர வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது கோழிக்கோடு ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.