ஹாலிவுட் படத்துக்கு நடிகை ஆடிஷன்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்ச்சல்..
கோலிவுட் நடிகைகள் பலருக்கு பாலிவுட் கனவு இருக்கிறது. அதற்காகப் பலர் முயன்று சிலர் வெற்றியும் கண்டனர். 70, 80களில் அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர் நடிகை ஸ்ரீதேவி. 16 வயதினிலே படத்தில் கிராமத்துப் பெண் மயிலாக ரசிகர்கள் மனதில் வலம் வந்தவர் பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார். பின்னர் இந்தி படங்களில் நடிக்கச் சென்று நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். பல ஆண்டுகள் அந்த இடத்தை தக்க வைத்திருந்தார்.பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஜான்வி, தாய் வழியில் நடிகையாகி விட்டார். பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். தனக்கென ஒரு இடத்தை ஜான்வி தக்க வைத்திருக்கிறார். முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடிக்க அதற்கான ரேஸில் ஓடிக் கொண்டிருக்கிறார்.ஸ்ரீதேவி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்றார். ஜான்வி பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு குறி வைத்திருக்கிறார். தற்போது அவர் இந்தியில் ரூஹி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தின் புரமோஷன் நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்ட ஜான்வி தனது பாலிவுட் கனவு பற்றி வெளிப்படுத்தினார்.
அவர் கூறும்போது,நடிகர், நடிகைகளுக்கு மொழி எல்லைக் கோடுகள் இல்லாமலிருப்பதை நான் விரும்புகிறேன். உலக அளவிலான படத்தில் நடிப்பது மிகவும் அற்புதமானது. எல்லைகள் கடந்து விரிந்து பரந்துள்ள திரையில் நடிக்கும்போது பல்வேறு கலாச்சாரங்களைக் கற்க முடியும் என்றார்.சமீபத்தில் ஹாலிவுட் படமொன்றின் ஆடிஷனில் ஜான்வி கலந்துகொண்டார். தற்போது நடித்துள்ள ரூஹி ஒரு திகில் படம். மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. இதுதவிர குட்லக் ஜெர்ரி, தோஷ்தானா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அமைரா தஸ்துர் போன்ற நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். இதில் இரு நடிகைகள் மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பியபோதும் பிரியங்கா சோப்ரா மட்டும் அமெரிக்கா வில் தங்கி ஹாலிவுட் படங்களில் முழு கவனம் செலுத்தி நடிக்கிறார்.