இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சில மாதங்கள் சற்று ஓய்ந்திருந்த கொரோனா பரவல் தற்போது இந்தியாவில் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்பட 7 மாநிலங்களில் நோய் பரவல் அதிகரித்துள்ளதால் இந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் சற்று குறைந்திருந்தது. கடந்த வருடம் பல வாரங்களில் தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை 95 ஆயிரத்தைத் தாண்டி இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 12 ஆயிரத்திற்கும் குறைந்தது.
ஆனால் தற்போது படிப்படியாக நோய் பரவல் மேலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் மீண்டும் நோய் பரவல் மெதுவாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 16,577 ஆகும். தமிழ்நாடு, கேரளா உள்பட 7 மாநிலங்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 89 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,63,491 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 120 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,825 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது இந்தியாவில் 1,55,986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் மிக அதிகமாக 8,207 பேருக்கு நோய் பரவியுள்ளது. மும்பையில் மட்டும் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100 ஆகும். அடுத்தபடியாக கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,106 பேருக்கு நோய் பரவியுள்ளது. இந்தியாவில் மீண்டும் மெதுவாக கொரோனா பரவல் அதிகரித்து வருவது மத்திய சுகாதாரத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் தான் நோய் பரவல் அதிகரிக்கிறது. இதனால் இந்த 7 மாவட்டங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நோய் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டெல்லியில் சுகாதாரத் துறை உயரதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் நோய் பரவல் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.