உபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே ஒரு ரகசிய இடத்தில் இரண்டு பேர் பயங்கர வெடி பொருட்களுடன் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16ம் தேதி இரவு அந்த பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும், பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்களில் ஒருவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பெரோஸ்கான் என்றும், இன்னொருவர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியைச் சேர்ந்த அன்சார் பதருதீன் என்றும் தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை உபி மாநில கூடுதல் போலீஸ் இயக்குனர் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரின் கேரளாவிலுள்ள வீடுகளில் உபி மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பந்தளத்தில் உள்ள அன்சாரின் வீட்டிலும் கோழிக்கோட்டில் உள்ள பெரோஸ்கானின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. கேரள போலீஸ் உதவியுடன் 6 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.