தேர்தல்: தனிநபர்களின் வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி

சட்டசபைத் தேர்தல் நடைமுறைகளை ஒட்டி அரசியல் கட்சியினரின் கணக்குகள் மட்டுமல்லாது தனிநபர்களின் வங்கிக் கணக்குகளும் பணப்பரிவர்த்தனைகளும் கூட கண்காணிக்கப்படும் இதற்கான தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்தார்.தலைமைச் செயலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக அமல்படுத்தப்படும்.

அதே சமயம் சட்டப்பேரவையைத் தொடர்ந்து நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் அரசு தரப்பில் எந்தவிதமான புதிய அறிவிப்புகளையும் வெளியிட முடியாது.தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. அதன்பேரில்,சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்த ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. தற்போது முதல் கட்டமாகத் துணை ராணுவம் 45 கம்பெனி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு ஆயிரம் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க முடியும். கொரோனா தொற்று வராமல் தடுக்கும் பொருட்டு வாக்காளர்கள் வாக்களிக்க சமூக இடைவெளி நிச்சயம் கடைப்பிடிக்கப்படும்.தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.

அரசியல் கட்சியினர் மட்டுமின்றி தனிப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்குகள்,பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட உள்ளது. இதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு வருகிறது.தேர்தல் ஆணையம் ரெட் அலார்ட் சிஸ்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த அறிவுறுத்தியது. ஆனால் அதை நடைமுறைப் படுத்த சாத்தியமில்லை என்றார்.

More News >>