டாய்ஸ்ஆர்அஸ் பொம்மை கடை - மீட்கும் முயற்சி தோல்வியா?
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் 'டாய்ஸ்ஆர்அஸ்' என்ற பொம்மைகள் விற்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இது திவாலாகும் நிலையை அடைந்துள்ளது. அதனால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய வர்த்தகத்தை கொண்ட டாய்ஸ்ஆர்அஸ் நிறுவனத்தை மீண்டும் நடத்துவதற்கு, பொம்மை உற்பத்தி நிறுவனமான எம்ஜிஏ எண்டர்டைன்மெண்ட்டின் தலைமை செயல் அதிகாரி ஐசக் லாரியன் முயற்சித்து வருகிறார்.
இதற்கென ‘கோபண்ட்மீ’ என்ற பெயரில் பணம் திரட்டும் முகாம் ஒன்றையும் அவர் நடத்தினார். நெருக்கடியிலிருக்கும் இந்த நிறுவனத்தின் மீது ஏனைய முதலீட்டாளர்களின் கவனத்தை திசைதிருப்பவே இந்த முகாமை நடத்தியதாகவும், ஒருவேளை ‘டாய்ஸ்ஆர்அஸ்’ நிறுவனத்தை வாங்கும் நிலை வந்தால் இம்முகாம் மூலம் திரட்டப்பட்ட பணத்தை பயன்படுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம், அமெரிக்காவிலுள்ள ‘டாய்ஸ்ஆர்அஸ்’ கடைகளுக்கு 675 மில்லியன் டாலரும், கனடாவிலுள்ள கடைகளுக்கு 215 மில்லியன் டாலரும் விலையாக குறித்து லாரியன் கேட்டிருந்தார். அந்த விலை ஒத்துக் கொள்ளப்படவில்லையென்று ஒரு தகவல் பரவியது.
பொருத்தமான விலையையே தாம் குறிப்பிட்டுள்ளதாகவும், தமது கேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அலுவலக ரீதியான தகவல் கிடைக்கவில்லை என்றும் ஐசக் லாரியன் கூறியுள்ளார்.
"டாய்ஸ்ஆர்அஸ் நிறுவனத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. அநேகர் வேலை இழந்து வருகின்றனர். அதை மீட்க இதுவே சரியான தருணம்," என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒரு மதிப்பு மிக்க நிறுவனத்தை தொடர்ந்து இயங்கச் செய்யவும், ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேருக்கான வேலை வாய்ப்பினை தக்கச் செய்யவும் தாம் தொடர்ந்து முயற்சிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com