தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மே மாதத்துடன் ஆட்சி முடிவடைகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா இந்த மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தேர்தலை எப்போது நடத்துவது, எத்தனை கட்டங்களாக நடத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்காக இன்று மாலை தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா டெல்லியில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: கொரோனா பரவலுக்கு இடையே 5 மாநிலங்களுக்குச் சட்டப்பேரவை தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்திற்கு இது ஒரு சவாலாகும். கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களில் 824 தொகுதிகளில் மொத்தம் 18.86 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த மாநிலங்களில் மொத்தம் 2.74 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும். கொரோனா பரவலைத் தொடர்ந்து வாக்குப் பதிவுக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு நேரம் 1 மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தபால் ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தப்படும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓட்டு போடத் தனி வசதி ஏற்படுத்தப்படும். வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்வதற்கு அதிகபட்சமாக 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் நடைமுறை சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் 19ம் தேதியாகும். 20ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். 22ம் தேதி வேட்புமனு தாக்கல் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கேரளாவிலும், புதுச்சேரியிலும் இதே ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் இரண்டு கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.