மீண்டும் 2பக்க விளம்பரம்.. இபிஎஸ், ஓபிஎஸ் உறவு ஒட்டுமா? உடையுமா அதிமுகவில் தொடரும் குழப்பம்..
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது புகழ்பாடும் 2 பக்க விளம்பரங்களை மீண்டும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். இதனால், இபிஎஸ், ஓபிஎஸ் உண்மையிலேயே ஒன்றாக இருக்கிறார்களா என்ற குழப்பம் அதிமுகவில் நீடிக்கிறது.முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு தொண்டர்கள் தொடர்ந்து குழப்பத்திலேயே இருக்கின்றனர். முதல்வராக ஓ.பி.எஸ் பதவியேற்பு, 2 மாதங்களில் ராஜினாமா, கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் சசிகலா தேர்வு, சசிகலாவுக்குச் சிறைத்தண்டனை, கூவத்தூரில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு, இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இணைப்பு, சசிகலா குடும்பம் நீக்கம் என்று பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆட்சி அதிகாரத்தால் கோடிகள் கொட்டிக் கொண்டிருந்ததால் யாரும் பிரியவில்லை.
கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி தற்போது முழுக்க முழுக்க மாறி விட்டார். சசிகலாவின் காலில் விழுந்து வணங்கி பதவியைப் பெற்ற அவர், தன்னை முதலமைச்சராக ஆக்கியது சசிகலா அல்ல. அதிமுகவின் எம்எல்ஏக்கள்தான் தேர்வு செய்தனர் என்று இப்போது கூறினார். அது மட்டுமல்ல. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே மாட்டேன் என்று அவருக்கே கதவைச் சாத்தி விட்டார்.எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி பாஜக மேலிட ஆதரவு இருப்பதால், அவரை நேரடியாக எதிர்க்க முடியாமலும் கட்சியை உடைக்க முடியாமலும் ஓ.பன்னீர்செல்வம் தவித்தார்.
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாமல் புழுங்கிய ஓ.பி.எஸ், கடந்த பிப்.7ம் தேதி தினமலர் நாளேட்டின் முதல் பக்கத்தில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தார். அந்த விளம்பரத்தில், விசுவாசத்தில் நிகழ்கால பரதன் என்ற கொட்டை எழுத்தில் தலைப்பிடப்பட்டிருந்தது. ஒருவருக்கு முதலமைச்சர் அரியாசனத்தை வழங்கி விட்டு, மீண்டும் அது திரும்பப் பெறப்பட்டதாக வரலாறே இல்லை. அந்த புதிய வரலாற்றை படைத்துக் காட்டியவர் அன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் என்று தன்னை ஜெயலலிதா பாராட்டியதை குறிப்பிட்டிருந்தார்.இதனால், ஓபிஎஸ்-இபிஎஸ் இடையேயான பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்தது. இதன்பின்பு, பிரதமர் மோடி கடந்த பிப்.14ம் தேதி சென்னை வந்து பிரம்மாண்டமான அரசு விழாவில் பங்கேற்றார். அன்று காலையில், பிரதமரை வரவேற்று பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் தமிழக அரசின் விளம்பரம் வெளியாகி இருந்தது. அதில், பிரதமர் மோடி, ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் மட்டும் வெளியாகி இருந்தது.
தினத்தந்தி நாளிதழ் 2 இதழ்களை வெளியிட்டிருந்தது. ஒரு தினத்தந்தியின் முதல் பக்கத்தில் இந்த அரசு விளம்பரம் வந்திருந்தது. இன்னொரு தினத்தந்தியின் முதல் பக்கத்தில் ஓ.பி.எஸ் சார்பில் முழுபக்க விளம்பரம் வந்திருந்தது. அதில் அயோத்திக்கு கிடைத்த பரதனைப் போல் தமிழகத்திற்குக் கிடைத்த ஓபிஎஸ் என்று தலைப்பு செய்தி போல் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஆந்திராவில் என்.டி.ராமா ராவைக் கவிழ்த்து மருமகன் சந்திரபாபு நாயுடு முதல்வரானது, கர்நாடகாவில் தேவகவுடவை கவிழ்த்த மகன் குமாரசாமி, உ.பி.யில் முலாம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தனது தந்தையிடம் இருந்து பதவியை பறித்தது என்று நம்பிக்கைத் துரோகத்திற்குப் பல உதாரணங்கள் கூறப்பட்டிருந்தது. இவை, சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டு, அவரது காலில் விழுந்து ஆசி பெற்று முதல்வரான எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டா். அவரது பண்பில் விசுவாசம் துளியும் இல்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.
ஆனாலும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட விழாக்களில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் ஒன்றுமே நடக்காதது போல், ஒற்றுமையாக இருப்பதாக காட்டிக் கொண்டனர். உள்ளுக்குள் இருவரும் கொலைவெறியுடன் இருந்தாலும் ராமனும், லட்சுமணனும் போல் காட்சி கொடுத்தனர்.இதன் தொடர்ச்சியாக, மீண்டும் இன்று(பிப்.27) காலை தினமலர் நாளிதழில் முதல்பக்கம், 2ம் பக்கம் முழுவதுமாக ஓ.பி.எஸ். விளம்பரம் கொடுத்திருக்கிறார். அதில், கொட்டை எழுத்தில் உழைப்பால் உயர்ந்தவர் என்று தலைப்பிட்டு, அவரது புகழ் பாடப்பட்டிருக்கிறது. அதில் ஜெயலலிதா, வாஜ்பாய், பிரணாப் முகர்ஜி, அப்துல்கலாம், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு ஆகியோருடன் ஓ.பி.எஸ். இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஓ.பி.எஸ் சாதனைகளைக் குறிப்பிட்டு நீண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது.குறிப்பாக, அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் தொடங்கி இன்று வரை பல்வேறு பதவிகளை இவர் வகித்திருந்தாலும் ஒரு சாதாரண தொண்டராகவே உழைத்து வருகிறார்.
நேற்று கட்சியில் சேர்ந்து இன்று தலைவராகும் அரசியல்வாதிகள் மத்தியில் சுமார் 45 ஆண்டுகளாகத் தான் சார்ந்த இயக்கத்திற்கு விசுவாசமாகச் செயல்பட்டு, தன்னுடைய அயராத உழைப்பால் நகர்மன்றத் தலைவர், எம்.எல்.ஏ, பொருளாளர், அமைச்சர் என்று படிப்படியாக முன்னேறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இது பற்றி அதிமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறுகையில், எடப்பாடியை ஒரு தலைவராகவோ, முதல்வராகவே தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து விளம்பரங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். சசிகலா குறித்தும் எடப்பாடி கடுமையாக பேசி வரும் நிலையில், ஓ.பி.எஸ். இது வரை சசிகலாவைப் பற்றி வாயே திறக்கவில்லை. காரணம், அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக சசிகலா பிரச்சாரம் செய்தால் அது அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும்.
அது மட்டுமல்ல, தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் 16 உட்பிரிவுகளை கொண்ட வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அளித்து, 68 உட்பிரிவுகளை கொண்ட சீர்மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு அளித்தது போன்றவையும் முக்குலத்தோரின் வாக்குகளை அதிமுகவுக்கு கிடைக்காமல் செய்து விடும். இதனால்தான், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் போன்றவர்கள் கூட மவுனம் சாதிக்கிறார்கள என்று தெரிவித்தார்.ஆக, மொத்தத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நீண்ட குழப்பம் நீடித்து வருகிறது என்பதும், அதில் பாஜகவின் மறைமுகத் தொடர்பு உள்ளது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.