தமிழக எல்லையில் ₹ 1.30 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது.தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா, கஞ்சா எண்ணை உட்பட போதைப் பொருட்கள் பெருமளவு கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் கலால் துறை, போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் இந்த சோதனையையும் மீறி போதைப் பொருட்கள் கேரளாவுக்கு பெருமளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக எல்லையில் உள்ள குமுளி வழியாக ஒரு கும்பல் போதைப் பொருள் கடத்துவதாக இடுக்கி மாவட்ட கலால் துறை அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கலால் துறை இன்ஸ்பெக்டர்களான கிருஷ்ண குமார் மற்றும் அனில் குமார் ஆகியோர் தலைமையில் நேற்றிரவு குமுளி சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் ஒரு ரகசிய அறையில் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்திய சோதனையில் 20 கிலோ கஞ்சா மற்றும் 1.100 கிலோ கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ₹ 1.30 கோடி ஆகும். இதையடுத்து அந்த காரில் இருந்த கேரளாவை சேர்ந்த மகேஷ் (26), பிரதீப் (30) மற்றும் ரெனி (40) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்த போதைப் பொருட்களை ஆந்திராவில் இருந்து மொத்த விலைக்கு வாங்கி கேரளாவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர். 3 பேரையும் கைது செய்த கலால் துறையினர் இடுக்கி நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.