ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இது யாருடைய ஐடியா? இங்கிலாந்தை போட்டுத் தாக்கும் பாய்காட்
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான அகமதாபாத் பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது எந்த புண்ணியவானின் பிரகாசமான ஐடியா என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பாய்காட் கேள்வி எழுப்பியுள்ளார்.இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே சமீபத்தில் இரண்டே நாளில் முடிவடைந்த அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பற்றித் தான் இப்போது கிரிக்கெட் உலகம் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் ஏராளமான மோசமான சாதனைகள் பிறந்துள்ளன. இரு அணிகளும் சேர்ந்து 4 இன்னிங்சுகளிலுமாக மொத்தம் 387 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஆசியாவில் டெஸ்ட் போட்டியில் குறைந்த ரன்களில் இது ஒரு புதிய சாதனையாகும்.
இதற்கு முன்பு சார்ஜாவில் 2002ல் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 422 ரன்கள் எடுத்தது தான் இதுவரை ஆசிய சாதனையாக இருந்தது. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 842 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன. இதுவும் ஒரு ஆசிய சாதனையாகும். இதற்கு முன்பு கொல்கத்தாவில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2019ல் நடந்த போட்டியில் 968 பந்துகளும், 2018ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 1028 பந்துகளும் வீசப்பட்டன.அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஒரு வெளிநாட்டு அணி எடுக்கும் 2வது மிகக் குறைந்த ரன்கள் ஆகும். இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மொத்தம் 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒரு அணி 200 ரன்களுக்குள் இரண்டு முறை அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் அகமதாபாத் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிந்தும், 3 வேகப்பந்து வீச்சாளர்களை இங்கிலாந்து பயன்படுத்தியதற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் பாய்காட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்களை சேர்க்க வேண்டும் என்ற பிரகாசமான ஐடியா யாருடையது என தெரியவில்லை. அந்த புண்ணியவான் யாராக இருந்தாலும் அதை நினைத்து அந்த நபர் வெட்கப்பட வேண்டும். ஒருவேளை இந்தப் போட்டி அகமதாபாத்திற்கு பதிலாக அடிலெய்டில் நடக்கிறது என அவர் நினைத்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை. டெஸ்ட் போட்டிக்கு எப்படிப்பட்ட பிட்ச் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக எந்த சட்டமும் கிடையாது என்று அவர் கூறினார்.