அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 சீட்.. பாஜகவுக்கு எத்தனை?
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவது உறுதியான நிலையில், அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மே2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆரம்பத்தில் பாமக இந்த முறை திமுக கூட்டணிக்குப் போகும் என்று பேசப்பட்டது. அதற்கேற்ப பாமக நிறுவனர் ராமதாசும், அரசியலில் எந்த கட்சியும் எதிரியல்ல என்றும், விடுதலை சிறுத்தைகள் இடம் பெறும் கூட்டணியில் சேருவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக இடம் பெறும் கூட்டணியில் வி.சி.க. இருக்காது என்று விளக்கம் கொடுத்தார். இதற்குப் பின்னர், திமுகவும், பாமகவும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொண்டன. இதனால், அதிமுக கூட்டணியில் பாமக நீடிப்பது உறுதியானது. எனினும், வன்னியர் இட ஒதுக்கீடு பிரச்சனையை எழுப்பி, ராமதாஸ் கூட்டணிக்கு நிபந்தனை விதித்து வந்தார். அந்த நிபந்தனையை தற்போது அதிமுக தற்காலிகமாக நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில், பாமக குழுவினர் இன்று அதிமுக குழுவினருடன் தேர்தல் உடன்பாடு குறித்துப் பேசுகின்றனர். அதேசமயம் ஏற்கனவே எத்தனை தொகுதிகள் என்று பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றித்தான் பேச வேண்டியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 22 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தேமுதிக 12, இதர கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதிமுக கடந்த முறை 227 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதி 7 தொகுதியிலும் கூட இரட்டை இலை சின்னத்தில் சிறிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த முறை 170 இடங்களில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.