அதிரடி வீரர் யூசுப் பதான், வினய் குமாரின் திடீர் ஓய்வுக்கு இது தான் காரணமா?
அதிரடி வீரரான யூசுப் பதான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஆகியோர் திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒரே நாளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் தங்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்ற மன வேதனை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதானின் அண்ணனான யூசுப் பதான் (38) ஒரு அதிரடி ஆல்ரவுண்டர் ஆவார். இந்தியா இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற போதும் அந்த அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறையும் கோப்பையை வென்ற போதும் அந்த இரு அணிகளிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் இவர் அனைத்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இதேபோல கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான வினய் குமாரும் (37) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வினய் குமார் இதுவரை இந்திய அணிக்காக 1 டெஸ்ட் போட்டியிலும், 31 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.இவர்கள் இருவரும் ஒரே நாளில் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த சீசனில் எந்த ஐபிஎல் அணியும் தங்களை அணியில் சேர்த்துக் கொள்ளாதது தான் இவர்களது திடீர் ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் அணியில் இடம்பெறாதது வினய் குமாரை விட இர்பான் பதானுக்குத் தான் அதிக வேதனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டில் தான் யூசுப் பதான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அரங்கேறினார். இந்தியாவுக்காக 57 ஒருநாள் போட்டிகளிலும், 22 டி20 போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார். 2007ல் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்ற போதும், 2011ல் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற போதும் இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். மத்திய நிலையில் சிறப்பாக ஆடும் பேட்ஸ்மேனான யூசுப் பதான் ஒருநாள் போட்டிகளில் 810 ரன்களும், டி20 போட்டிகளில் 236 ரன்களும் எடுத்துள்ளார். முதல்தர போட்டிகளில் 100 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 4,825 ரன்களும், 201 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 2012ம் ஆண்டு மார்ச்சில் தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் தான் இவர் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடினார்.