இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு சமூக பரவல் தான் காரணம் நிபுணர் கருத்து
இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு உருமாறிய கொரோனா வைரஸ் காரணமல்ல. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது தான் காரணம் என்று நிமான்ஸ் மூளை உயிரியல் பிரிவு முன்னாள் ஆசிரியர் டாக்டர் ரவி கூறியுள்ளார்.இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது. ஆனால் தற்போது நோயாளிகள் எண்ணிக்கை தினமும் 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,488 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 113 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,79,979 ஆக உயர்ந்துள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,938 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்பட சில மாநிலங்களில் தான் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கேரளாவில் நேற்று 3,800 க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியது. இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா உட்பட மாநிலங்களில் நோய் அதிகரிப்பதற்கு சமூக பரவல் தான் காரணம் என்று பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை டாக்டர் ரவி கூறியுள்ளார். அவர் கூறுகையில், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் கூட தொடங்கி விட்டனர். இதுதான் மீண்டும் நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே நிபந்தனைகளை மேலும் கடுமையாக்க வேண்டியது முக்கிய அவசியமாகும். தற்போதைய நோய் பரவலுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் காரணமல்ல. இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசியால் உருமாறிய கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.