H4 EAD Visa ஹெச்-4 ஈஏடி விசா - தலைமேல் தொங்கும் கத்தி

ஒபாமா கால கொள்கைகள், நடவடிக்கைகள் பல டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் மாறியுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பதினைந்து பேர், பணியினிமித்தம் அமெரிக்காவில் குடியேறும் ஹெச்1பி விசா பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் வாழ்க்கை துணைக்கான ஹெச்-4 ஈஏடி விசாவை ரத்து செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலர் கிறிஸ்டன் நீல்சனுக்கு கடந்த மார்ச் மாதம் கடிதம் எழுதியிருந்தனர்.

கலிபோர்னியாவில் ஹெச்4 ஈஏடி விசா பெற்று தங்கியுள்ள பலர், சொந்த நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தி அநேக அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றனர்.  இந்த விசா ரத்து செய்யப்பட்டால், அது பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும் என்றும் கருதப்படுகின்றது. ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக், குவெல்காம் போன்ற நிறுவனங்கள் கலிபோர்னியாவின் பொருளாதாரத்தை உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உயர்த்தியுள்ளன.

கலிபோர்னியாவில் வசிப்பவர்களில் 10 மில்லியன் பேருக்கு அதிகமானோர் வேறு நாடுகளில் பிறந்தவர்கள் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மசாசூசெட்ஸ் உறுப்பினர்களும் இதேபோன்றதொரு கடிதத்தை ஜனவரி மாதம் அனுப்பியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை பிரிவு (யூஎஸ்சிஐஎஸ்) வழங்கிய தகவலின்படி 2016-ம் நிதி ஆண்டில் 41,526 ஹெச்-4 விசாதாரர்களுக்கு பணிபுரியும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலிகான் பள்ளத்தாக்கிலுள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு பொறியாளர்களை சார்ந்துள்ளதால் பே ஏரியாவில் குறிப்பிடத்தக்க அளவு ஹெச்-1பி விசாதாரர்கள் இருக்கின்றனர்.

குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை பிரிவின் தலைவர் பிரான்சிஸ் சிஸ்னா எழுதியுள்ள பதில் கடிதத்தில், 'அமெரிக்க பொருட்களை வாங்கு; அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்து' என்ற புது நிர்வாகத்தின் கொள்கை படி, ஹெச்-1பி விசா பெற்றுள்ளவர்களின் வாழ்க்கை துணையினருக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கான ஹெச்-4 ஈஏடி பணி அனுமதி திரும்பப் பெறப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது. 90 நாட்களுக்குள் பதில் அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் வரும் மே 22-ம் தேதி, உள்நாட்டு பாதுகாப்பு துறை பதில் அளிக்க வேண்டும். முடிவு தெரிய அதுவரை காத்திருக்க வேண்டும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>