வன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். அரசிதழில் இது வெளியிடப்பட்டு சட்டமாகியுள்ளது.
தமிழகத்தில் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை மற்றும் தமிழக அரசுப் பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட இதுக்கீட்டில் வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதமும் சீர்மரபினருக்கு 7.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக சிறப்பு இட ஒதுக்கீடு சட்டம் 2021 என்று இது அழைக்கப்படுகிறது.
அண்ணா திமுக அரசு இதை நிறைவேற்றினாலும் தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தே அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கியதையடுத்து அது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்வதால் அதன் முடிவுகள் தெரிய வந்ததும் அதன்படி இட ஒதுக்கீடு மறுவரையறை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ஒதுக்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீடு சதவீதம் ஆறு மாதங்களுக்குப் பிறகு மாற்றப்படக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.