சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாமா? அமித்ஷாவுடன் பேசியது என்ன?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்து பேசிய போது, அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக கூட்டணிகளைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கட்சிகளே இடம் பெறும் எனத் தெரிய வந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக ஒரு நிபந்தனையை வைத்து பேரம் தொடங்கினார். கடைசியில் எம்.பி.சி. பட்டியலில் வன்னியருக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு பெற்றார். மேலும், சட்டசபைத் தேர்தலில் 23 தொகுதிகள் பெற்று கொண்டு உடன்பாடு செய்து கொண்டார். பா.ஜ.க. தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று முன் தினம்(பிப்.27) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன்ரெட்டி ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சென்னை ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நேற்றிரவு(பிப்.28) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். பா.ஜ.க. தரப்பில் வி.கே.சிங், கிஷன்ரெட்டி, சி.டி.ரவி, எல்.முருகன், பொன்ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.வின் ஒரே எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் உடனிருந்தனர். பா.ஜ.க. தரப்பில் குறைந்தபட்சம் 30 தொகுதிகள் கேட்கப்பட்டது. அ.தி.மு.க. தரப்பில் 20 தொகுதிகள் வரை தருவதாக கூறினர். அதேசமயம், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியை பாஜக கேட்டது. அதற்கு அதிமுக தரப்பில் ஒப்புக் கொண்டனர். மேலும், கன்னியாகுமரி, கோவை, திருச்சி, வேலூர் மாவட்டங்களில் அதிமுக முன்பு வெற்றி பெற்ற தொகுதிகளையும் பாஜகவினர் கேட்டிருக்கிறார்கள்.
இது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து விட்டு சொல்வதாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. இதில் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா அல்லது அவரை பொருட்படுத்தாமல் விட்டு விடுவதா என்பது குறித்தும் அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தேமுதிகவுடனும் தொகுதி பங்கீடு பற்றி அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் கடந்த பிப்.27ம் தேதி சந்தித்து பேசினர். தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று கூறியுள்ளனர். ஆனால், தேமுதிக தரப்பில் 20 தொகுதிகளாவது தர வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். மேலும், தேர்தல் நிதி பற்றியும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்றிரவு(பிப்.28) மீண்டும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.இந்நிலையில், இன்று(மார்ச்1) காலையில் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் ஆலோசித்தனர். அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் அமித்ஷாவுடன் ஆலோசித்த விஷயங்கள் குறித்து வெளியிட்டனர். அமித்ஷாவுடன் பேசிய விஷயங்கள் குறித்தும், சசிகலாவை சேர்ப்பது அல்லது அமமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனினும், எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. அதிமுகவின் முடிவுக்காக சசிகலா அமைதி காத்து வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி ஏற்படாவிட்டால், தென்மாவட்டங்களை தங்கள் செல்வாக்கை நிரூபித்து காட்டுவதற்கு சசிகலா தரப்பினர் தயாராகி வருகின்றனர்.