மாட்டுக்குப் போடுகிற ஊசியா? கோவாக்சின் தடுப்பூசி போட்ட மோடி

திங்கள்கிழமை அதிகாலை புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவுதான் பிரதமர் மோடி தடுப்பூசி போடுவதற்கு வர இருக்கும் செய்தி மருத்தவமனைக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், மறுநாள் திங்கள் வார நாளாக இருப்பதினால் மற்ற நோயாளிகளுக்கு இடைஞ்சலாக இல்லாமல் இருக்கும்படி காலை 6:30 மணிக்கே பிரதமர் வந்ததாகவும் எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு தடுப்பூசி போட வேண்டிய விஷயம், தடுப்பூசி பிரிவினருக்கு காலையில்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிரிவுக்கு வந்ததும் சூழ்நிலையின் இறுக்கத்தைப் போக்கும்வண்ணம் பிரதமர் அங்கிருந்தவர்களிடம் உரையாடியதாகக் கூறப்படுகிறது.

அங்கே இருந்தவர்களின் பெயர்கள் மற்றும் ஊர் விவரங்களை கேட்ட பிரதமர், "இது மாட்டுக்குப் போடுகிற ஊசியா?" என்று கேட்டதாகவும், "இல்லை" என்று பதிலளித்த செவிலியர் அவர் ஏன் கேட்டார் என்பது புரியாமல் பார்த்ததால், "அரசியல்வாதிகளுக்கு தோல் தடித்திருக்கும் என்று சொல்வார்களே, அதனால் எனக்காக விசேஷமாக பருமனான ஊசி வைத்திருக்கிறீர்களா?" என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகே பிரதமர் நகைச்சுவையாக பேசுகிறார் என்பது தெரிந்து அந்த இடம் கலகலப்பானது. புதுச்சேரியை சேர்ந்த நர்ஸ் பி. நிவேதா, பிரதமர் மோடிக்கு கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ளார். ஊசி போட்டு முடித்ததும், "முடிந்துவிட்டதா? எனக்கு ஊசி போட்டதே தெரியவில்லை?" என்றும் பிரதமர் கூறியுள்ளார். தடுப்பூசி போடப்பட்ட பிறகு அரை மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் பின்னர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

"தடுப்பூசி போட தகுதியுள்ளவர்கள் அனைவரும் போட்டுக்கொண்டு, நம் நாட்டை கொரோனா இல்லாத நாடாக்கவேண்டும்" என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 முதல் 60 வயது வரையுள்ளவர்களில் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடிய உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் முதலில் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கு www.cowin.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். ஒரு நபர், ஒரு தொலைபேசி எண்ணைக் கொண்டு நான்கு பேருக்கு பதிவு செய்யலாம். ஆனால், தடுப்பூசி போடப்படும்போது நான்கு பேரும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, என்பிஆர் ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட ஏதாவது ஓர் ஆவணத்தை காட்டவேண்டும் என்று கூறப்படுகிறது.

More News >>