ஆறு மாதங்களில் நீரிழிவை குறைக்கும்.. மாதவிடாய் கால வேதனையை குறைக்கும்...
கொரோனா காரணமாக எல்லா விவசாய வேலைகளுக்கும் பாதிக்கப்பட்ட நிலையில் சூரியகாந்தி சாகுபடி செய்த விவசாயிகள், சூரியகாந்தி விதைகளை தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை செய்ய முடிந்ததால் மகிழ்ச்சியடைந்ததாக செய்திகள் தெரிவித்தன. அந்த அளவுக்கு சூரியகாந்தி விதைகளுக்கு வரவேற்பு உள்ளது. சூரியகாந்திகள், விதைகளுக்காக, எண்ணெய்க்காக என்று இரு வகைகளில் வளர்க்கப்படுகின்றன. சூரியகாந்தி விதைகள் அதிக தரமிக்க ஊட்டச்சத்துகள் கொண்டது. இவை பல கொடிய வியாதிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் திறன் கொண்டவை. ஆரோக்கியமான கொழுப்பு, பல வைட்டமின்கள், தாது உப்புகள் இவற்றில் நிறைந்திருப்பதால் அழற்சி, இதய நோய் மற்றும் இன்சுலின் போதாமையால் வரக்கூடிய இரண்டாம் வகை நீரிழிவு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. வைட்டமின் இ, துத்தநாகம் (ஸிங்க்), செலினியம் ஆகிய சத்துகள் நம் உடல் செல்களை ஆபத்தை விளைவிக்கும் நிலையற்ற அணுக்களிடமிருந்து (ஃப்ரீ ராடிகல்ஸ்) பாதுகாக்கின்றன. இவை உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது.
சூரியகாந்தி விதைகளிலுள்ள சத்துகள்30 கிராம் வறுத்த சூரியகாந்தி விதைகளில் 163 கலோரி ஆற்றல், 14 கிராம் கொழுப்பு, 5.5 கிராம் புரதம் (புரோட்டீன்), 6.5 கிராம் கார்போஹைடிரேடு, 3 கிராம் நார்ச்சத்து, இது தவிர தினசரி தேவையான அளவில் 37 சதவீதம் வைட்டமின் இ, 10 சதவீதம் நையஸின், 11 சதவீதம் வைட்டமின் பி6, 6 சதவீதம் இரும்புச் சத்து, 9 சதவீதம் மெக்னீசியம், 10 சதவீதம் துத்தநாகம் (ஸிங்க்) ஆகியவை உள்ளன.
குறைக்கப்படும் இதயநோய் அபாயம்இரத்தநாளங்களை சுருங்கச் செய்யும் நொதியை (என்சைம்) தடுக்கக்கூடிய கூட்டுப்பொருள் சூரியகாந்தி விதையில் உள்ளது. இது இரத்தநாளங்களை தளர்த்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதனால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. தமனிகளில் இரத்தம் ஏற்படுத்தக்கூடிய அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய மெக்னீசியமும் சூரியகாந்தி விதைகளில் உள்ளது.
ஆறு மாதங்களில் குறையும் நீரிழிவுஇரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள், எப்போது அதை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது அவசியம். அதற்கு சூரியகாந்தி விதைகள் உதவுகின்றன. இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்துவது குறித்த பல ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன. தினமும் ஒரு கைப்பிடியளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டால் ஆறு மாதங்களில் காலை உணவுக்கு முன் எடுக்கும் சர்க்கரையின் அளவு 10 சதவீதம் குறைவதாக கூறப்படுகிறது. சூரியகாந்தி விதையிலுள்ள குளோரோஜெனிக் அமிலத்தின் காரணமாக சர்க்கரை குறைவதாகக் கூறப்படுகிறது.
குறையும் கொலஸ்ட்ரால்கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்டிஎல் குறைவதற்கு சூரியகாந்தி விதையிலுள்ள நார்ச்சத்து உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் பி3 (நையஸின்), எல்டிஎல்லை குறைக்கிறது. அதேவேளையில் அதிலுள்ள வைட்டமின் பி5, நல்ல கொலஸ்ட்ராலான எச்டிஎல் அளவை அதிகரிக்கிறது.
அதிகரிக்கும் மூளை செயல்பாடுகூர்மையாக கவனிக்கும் திறன் மூளைக்கு வேண்டுமெனில் சூரியகாந்தி விதைகளை சாப்பிடலாம். இதிலுள்ள வைட்டமின் பி6 சத்து மனதை உற்சாகமாக்குகிறது. ஞாபகசக்தியையும் கவனிக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
மாதவிடாய் கால தொந்தரவுமாதவிடாய்க்கு முன்பு வரக்கூடிய பிஎம்எஸ் எனப்படும் உடல்நல பிரச்னைகள், அவதிகளை சூரியகாந்தி விதைகள் நன்றாக குறைக்கின்றன. சரும ஆரோக்கியம், அழற்சியை குறைத்தல், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தல் ஆகிய இயல்புகளும் சூரியகாந்தி விதைக்கு உள்ளன.
எப்படி சாப்பிடுவது?சூரியகாந்தி விதைகள், கூடுடன் மற்றும் கூடு நீக்கப்பட்டு கடைகளில் கிடைக்கிறது. சூரியகாந்தி விதையின் கூடானது (உறை) கறுப்பு நிறத்தில் இருக்கும். அதை பற்களால் கடித்து நீக்கிவிட்டு, உள்ளே இருப்பதை மட்டும் சாப்பிட வேண்டும். கூடு நீக்கப்பட்ட சூரியகாந்தி விதைகளை சாலட், யோகர்ட், கஞ்சி மற்றும் ஓட்ஸ்மீல் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம். பேக் செய்யப்பட்ட சூரியகாந்தி விதைகள் சில நேரங்களில் பச்சையாக காணப்படலாம். அதிலுள்ள குளோரோஜெனிக் அமிலம், சமையல் சோடாவுடன் வினைபுரிந்து வேதிவினையின் காரணமாக நிறம் மாறலாம். பொதுவாக இது பாதிப்பை உருவாக்குவதில்லை. ஒருநாளைக்கு 30 கிராமுக்கு அதிகமாக இதை சாப்பிட வேண்டாம்.