மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட்டவர் திடீர் சாவு..
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி 2வது தவணை போட்டுக் கொண்ட டிரைவர் திடீர் மரணம் அடைந்தார். சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் நேற்று(மார்ச்2) வரை ஒரு கோடியே 11 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. ஒன்றரை லட்சம் பேர் இந்நோயால் இறந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, மருத்துவ, சுகாதார களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மும்பையில் கண்மருத்துவர் ஒருவரிடம் டிரைவராக பணியாற்றும் சுக்தேவ் கிர்தாத் என்ற 45 வயது நபர் கடந்த ஜன.28ம் தேதி முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டார். 2வது தவணையாக நேற்று(மார்ச்3) அவர் தடுப்பூசி போட்டு கொண்டார்.
தடுப்பூசி போடப்பட்டவர்களை மருத்துவமனையிலேயே 15 நிமிடங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். அப்படி சுக்தேவ் வைக்கப்பட்டிருந்த போது அவருக்கு திடீரென வியர்த்து கொட்டியது. அத்துடன் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இந்திரா காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து டாக்டர் காரத் கூறுகையில், சுக்தேவ் என்ன காரணத்தால் உயிரிழந்தார் என்பது பிரேதப் பரிசோதனையில்தான் தெரியும். தடுப்பூசி போடப்பட்ட பிறகு அவரது ரத்தஅழுத்தம், ஆக்ஸிஜன் அளவு சரியாகவே இருந்தது என்றார். தடுப்பூசி போட்ட சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் தடுப்பூசி போடுவதற்கு மக்களிடம் பயம் ஏற்பட்டிருக்கிறது.