பதிவு, காப்பீடு இல்லாமல் இயங்கும் குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள்: டிராபிக் ராமசாமி வழக்கு
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் குப்பை அல்ல பயன்படுத்தப்படும் பேட்டரி ஆட்டோக்கள் பதிவு பெறாமலும் காப்பீடு செய்யாமலும் இயக்கப்படுகின்றன எனவே இவற்றை பயன்படுத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில், குப்பைகளை அப்புறப்படுத்த பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில், 3 ஆயிரம் பேட்டரி ஆட்டோக்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்படாத இந்த ஆட்டோக்களுக்கு, காப்பீடும் இல்லை என்பதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பதிவு செய்யப்படாமல் இயக்கப்படும் ஆட்டோக்களால் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படும் பாதசாரிகள், எந்த இழப்பீடும் பெற முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன சட்டப்படி, பேட்டரி மூலம் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்களை பதிவு செய்ய எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை எனவும், கடந்த 18 மாதங்களாக இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும், இருந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடமை தவறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக இயக்கப்படும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், கடமை தவறிய போக்குவரத்து துறை அதிகாரிகள் மீதும், போக்குவரத்து காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.