ஹெச். ராஜா மீதான வழக்கு : நீதிமன்றம் புதிய உத்தரவு

ஹெச். ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை. கடந்த 2018 ல் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதில் கலந்து கொண்ட பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை இழிவான சொற்களில் விமர்சித்தார். அந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கில், ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் அவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் திருமயம் காவல் நிலையம் விசாரித்த வழக்கில், விசாரணையை முடித்து விரைவில் ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக துணை தலைவர் துரைசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த ஒரு நீதிமன்றம் 2 மாதத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும், 3 மாத கால அவகாசம் கோரப்பட்டது. அந்த அவகாசமும் வழங்கப்பட்ட நிலையில் , தற்போதுவரை அந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகவே தொடர்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27ம் தேதிக்குள்ளாக நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More News >>