மொபைல் போன் பயனர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தும் டிக்டாக் போன்ற செயலி
முன்னணி வீடியோ ஸ்டீரிமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் டிக்டாக் போன்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. நகைச்சுவை சேகரிப்பிலிருந்து வேடிக்கையான காட்சி துணுக்குகளை அளிப்பதற்காக ஃபாஸ்ட்லாவ்ஸ் (Fast Laughs) என்ற செயலியை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது சில நாடுகளில் மட்டும் ஐஓஎஸ் தளத்தில் மட்டும் ஃபாஸ்ட்லாவ்ஸ் கிடைக்கிறது. ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நிகழ்ச்சிகளிலிருந்தும் இதில் காட்சிகள் பகிரப்படுகின்றன.
இந்தச் செயலியில் வரும் காட்சித் துணுக்குகளை பயனர்கள் தொகுத்து நேரம் கிடைக்கும்போது பார்ப்பதற்காக சேகரித்து வைத்துக்கொள்ளலாம். திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களின் காட்சிகள் இதில் கிடைக்கிறது. ஃபாஸ்ட்லாவ்ஸ் செயலியில் வரும் காட்சித் துணுக்குகளை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றில் பயனர்கள் பகிர்ந்து தங்கள் நண்பர்களை காணச்செய்யலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வடிவமும் விரைவில் சோதனை செய்யப்பட இருப்பதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது