சிறுமிகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை அவசர சட்டம் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்
12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாட்டில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் இதை அவசர சட்டமாக பிறப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த அவசர சட்டம் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அவசர சட்டத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் விசாரணை குறித்தும் விரிவாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
காஷ்மீரின் கதுவா நகரில் சமீபத்தில் 8 வயது சிறுமி கூட்டாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com