நடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..
தனது வீட்டில் வருமான வரித் துறையினர் 3 நாளாக நடத்திய ரெய்டு குறித்து 3 விஷயங்களை நடிகை டாப்சி பன்னு கூறியுள்ளார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை டாப்சி, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக நடிகை டாப்சிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். பாலிவுட் இயக்குனர்கள் அனுராக் கஷ்யப் மற்றும் விகாஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் ஐ.டி.ரெய்டு நடந்தது. இவர்கள் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்ததால், இவர்களின் வீடுகளில் குறிவைத்து ஐ.டி.ரெய்டு நடத்தப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், டாப்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: வருமான வரித்துறை 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தியதில் 3 விஷயங்கள். ஒன்று, நான் பாரிஸ் நகரில் வைத்திருப்பதாக கூறப்படும் பங்களாவின் சாவியை அவர்கள் தேடினார்கள். ஏனென்றால், கோடை வருகிறதல்லவா? அடுத்து, நான் பெற்றதாக கூறப்படும் ரூ.5 கோடிக்கான அத்தாட்சியை தேடினார்கள். நான் அதை ஏற்கனவே மறுத்திருக்கிறேன். மூன்றாவதாக, 2013ம் ஆண்டில் எனது வீட்டில் நடந்த ரெய்டு குறித்து நிதியமைச்சர் கூறியதும் எனக்கு அது நினைவுக்கு வந்தது. இதற்கு மேலும் மலிவாக போக வேண்டாம். இவ்வாறு டாப்சி கூறியிருக்கிறார். டாப்சி வீட்டு ரெய்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்த போது, 2013ல் காங்கிரஸ் ஆட்சியிலும் டாப்சி வீட்டில் ரெய்டு நடந்தது, அப்போது யாரும் விமர்சிக்கவில்லையே? என்று கூறியிருந்தார். அதற்குத்தான் டாப்சி கிண்டலாக கடைசி பதிவு போட்டிருக்கிறார்.