ரங்கசாமி மவுனம் எதிரொலி : முன்னாள் அமைச்சர் கண்ணனுடன், மத்திய அமைச்சர் சந்திப்பு
புதுச்சேரி சட்டபேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் கட்சி விலக அதன் தலைவர் ரங்கசாமி முடிவு செய்துவிட்டார். இது தொடர்பாக பாஜக மேலிடம் சமாதானம் பேசியும் எந்த பலனும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் தனித்து போட்டியிடுவதில் ரங்கசாமி உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ரங்கசாமி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் எந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும் என்ற அச்சம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் முக்கிய பிரமுகர்களை பிடிக்கும் பணியில் பாஜக தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சரும், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளருமான அர்ஜுன் மேக்வால், இன்று முன்னாள் அமைச்சர் கண்ணன் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது பாஜகவுடன் இணைந்து பணியாற்ற கண்ணனுக்கு அர்ஜுன் மேக்வால் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக ஒரிரு நாட்களில் பதில் அளிப்பதாக கண்ணன் தெரிவித்திருக்கிறார்.