வெங்காயம் மட்டுமல்ல...வாய் துர்நாற்றத்தை தவிர்க்க இவற்றையும் கவனியுங்கள்!
வாய் துர்நாற்றம் பலருக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கும் ஒரு பிரச்னையாகவே உள்ளது. சிலருக்கு அதற்குக் காரணத்தைக் கூட அறிய இயலாது. நாம் விரும்பி உண்ணும் சில உணவுகள் வாயிலிருந்து துர்நாற்றம் எழுவதற்குக் காரணமாகின்றன. நாம் வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவை மட்டும் வாயிலிருந்து துர்நாற்றத்தை வீசச்செய்கின்றன என்று நினைக்கிறோம். வேறு சில உணவுகளாலும் துர்நாற்றம் எழுகிறது. எந்த உணவுகள், என்னென்ன காரணத்தால் துர்நாற்றத்தை எழுப்புகின்றன என்பதை அறிந்துகொண்டால் துர்நாற்றத்தை தவிர்க்க முடியும்.
இறைச்சிநுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களுக்கு புரதம் (புரோட்டீன்) மிகவும் பிடித்தமானது. இறைச்சி சாப்பிட்டால் அவற்றிலுள்ள புரதத்தை பாக்டீரியாக்கள் அம்மோனியா கூட்டுப்பொருள்களாக சிதைக்கின்றன. அதன் காரணமாக வாயில் துர்நாற்றம் எழுகிறது.
ஆரஞ்சுஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரிக் வகை பழங்களும் பாக்டீரியாக்களுக்கு விருந்து போன்றவை. அதிக அளவு இப்பழங்களை சாப்பிடுவதும் துர்நாற்றத்திற்குக் காரணமாகலாம்.
மீன்பொதுவாக மீன்களில் ஒருவகை நாற்றம் உண்டு. டிரைமெத்தில் அமினோக்கள் என்ற கூட்டுப்பொருள் மீன்களில் உள்ளது. இது சாப்பிட்ட பிறகும் வெகு நேரம் வாயில் தங்கி துர்நாற்றம் வீச காரணமாகக்கூடும்.
பால் பொருள்கள்பால் பொருள்களில் அதிகமான அமினோ அமிலங்கள் உள்ளன. இவையும் பாக்டீரியாக்களை ஊட்டி வளர்க்கக்கூடிவை. இந்த பாக்டீரியாக்கள் வெளியிடும் ஹைட்ரஜன் சல்பைடு துர்நாற்றத்தை எழுப்பக்கூடும்.
காஃபிகாஃபி மற்றும் மது ஆகியவையும் வாயில் நுண்ணுயிரிகள் தங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். இவை வாயில் உமிழ்நீர் உற்பத்தியாவதை குறைக்கும். உமிழ்நீரின் அளவு குறைவதால் துர்நாற்றம் எழும்புகிறது.
பீநட் பட்டர்பீநட் பட்டர் ஒட்டக்கூடிய தன்மை கொண்டது. ஆகவே, பாக்டீரியாக்கள் வெகுநேரம் வாயில் தங்குவதற்கு இது உதவுகிறது. அதிலும் சுவையூட்டப்பட்ட பீநட் பட்டரை சிதைப்பதற்கு பாக்டீரியாக்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். இதனாலும் வாயில் துர்நாற்றம் உருவாகலாம்.
எப்படி தவிர்க்கலாம்?தினமும் இரு வேளை பல் துலக்குதல் அவசியம்.பல் இடுக்குகளை சுத்தம் (floss) செய்ய வேண்டும். இவற்றை ஒழுங்காக செய்தாலும். மேற்கூறப்பட்ட உணவுகளை சாப்பிட்டதும் உடனே பல்லை துலக்குவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.