அதிமுக கூட்டணியை உதறி தள்ளிய தேமுதிக..

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகி விட்டது. அடுத்து, அந்த கட்சி மூன்றாவது அணிக்கு போகுமா? கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம்பெற்றன. சட்டமன்றத் தேர்தலில் அதே கூட்டணி நீடிக்கும் என்று அதிமுகவினர் கூறி வந்தனர். அதே போல், பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு மேற்கொண்டுள்ளன. வழக்கம் போல், பாமக முதல் கட்சியாக அதிமுகவிடம் பேரம் பேசி, 23 சட்டமன்றத் தொகுதிகளை பெற்றது. அடுத்து பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

தேமுதிகவை ஆரம்பம் முதல் அதிமுகவினர் பெரிய பொருட்டாகவே கருதவில்லை. ஆனால், தங்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தொடர்ந்து கோரிக்கை விடுத்தார். அதன்பிறகு 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. தேமுதிக குழுவினர் பேசுகையில், வடமாவட்டங்களில் மட்டுமே பாமக செல்வாக்கு பெற்றிருக்கிறது. எங்கள் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு உள்ளது. எனவே, பாமகவுக்கு சமமாக 23 தொகுதிகள் தர வேண்டும் என்று கேட்டனர். ஆனால், அதிமுக தரப்பில் 10ல் தொடங்கி 13 தொகுதிகள் வரை தருவதாக முன்வந்தனர்.

கடைசியில், பாஜகவை போல் 20 தொகுதிகளாவது தர வேண்டுமென்று தேமுதிகவினர் கோரினர். ஆனால், அதை அதிமுக ஏற்கவில்லை. இதையடுத்து, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக கூட்டணியில் தொகுதிகள் எண்ணிக்கை, கேட்ட தொகுதிகள் தரப்படாததால் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>