அண்ணன் என்ன? தம்பி என்ன? ஆண்டிப்பட்டி தேர்தல் சுவாரஸ்யம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் எதிர் எதிர் கட்சியில் மீண்டும் நேருக்கு நேர் மோதும் சகோதரர்கள். அண்ணன் திமுக வேட்பாளர், தம்பி அதிமுக வேட்பாளர், வெற்றி யாருக்கு? தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தமிழக அரசியலில் நட்சத்திர தொகுதிதான். சொல்ல . மறைந்த முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றதால் இந்தத் தொகுதி இரு முதலமைச்சர்களை உருவாக்கிய தொகுதி என்பது மட்டுமல்லாமல் விஜபி அந்தஸ்தை பெற்ற தொகுதி. இத்தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சகோதரர்கள் எதிர் எதிர் கட்சியில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.இத்தொகுதியில் அதிமுக சார்பாக இம்முறை லோகிராஜன் மீண்டும் போட்டியிடுகிறார்.

62 வயதான லோகிராஜன் அரசு ஒப்பந்ததாரர், டிரான்ஸ்போர்ட் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். 1986ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினர். தற்போது ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட லோகிராஜன் திமுக வேட்பாளரான தனது சகோதரர் மகாராஜனிடம் தோல்வியைத் தழுவினார். அடுத்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆண்டிபட்டி ஒன்றிய பெருந்தலைவராக உள்ளார். இந்நிலையில் இன்று திமுக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜனே திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். 66 வயதான இவர் விவசாயம் மற்றும் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆண்டிபட்டியில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் சகோதரர்களான திமுக மகாராஜன் அதிமுக லோகி ராஜனும் எதிர் எதிர் கட்சியில் போட்டியிட்டனர். இதில் அண்ணன் மகாராஜன் தம்பி லோகிராஜனை விட 12,323 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஆண்டிபட்டி தொகுதியில் சகோதரர்கள் இருவரும் மீண்டும் நேருக்கு நேர் போட்டியிடுவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>