மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
ஸொமட்டோ டெலிவரி பையன் தன்னை மூக்கில் குத்தியதாக ட்விட்டரில் பெண் ஒருவர் பதிவிட்டதையடுத்து நெட்டிசன்கள் பரபரப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சில நாள்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த ஹிடேஸா சந்திரானீ என்ற பெண் ஸொமட்டோவில் உணவு ஆர்டர் செய்திருந்தார். உணவு வர தாமதமாகியதை அடுத்து அவர் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு தன்னுடைய ஆர்டரை ரத்து செய்யும்படி அல்லது பணம் வசூலிக்காமல் இருக்கும்படி தெரிவித்துள்ளார்.உணவை கொண்டு வந்த காமராஜ் என்பவர் தன்னிடம் கடுமையாக பேசியதாகவும், கதவை மூடச் சென்ற தன்னை தள்ளிவிட்டுவிட்டு, கொண்டு வந்திருந்த உணவை பொட்டலத்தை எடுத்துச் செல்ல முயன்றதாகவும், தான் அதைத் தடுத்ததால் மூக்கில் குத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.
டெலிவரி செய்ய வந்த காமராஜோ, தாமதத்திற்கான காரணத்தை தான் பொறுமையாக விளக்கி வருத்தம் தெரிவித்ததாகவும், வாடிக்கையாளர் பணம் தர மறுத்ததால், ஸொமட்டோ நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டு, பின்னர் அவர்கள் ஆலோசனையின்பேரிலேயே உணவை எடுத்துச் செல்ல முயன்றதாகவும் கூறியுள்ளார். வாடிக்கையாளரான ஹிடேஸா தன்னை வீட்டின் வெளியே இருந்த செருப்பால் அடித்ததால், தற்காப்புக்காக கைகளை தட்டியதாக தெரிவித்துள்ள காமராஜ். ஹிடேஸா தன்னை செருப்பால் அடித்தபோது, அவர் அணிந்திருந்த மோதிரமே மூக்கில் பட்டதாகவும், மிகவும் பயந்துபோனதால் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
காமராஜ் கைது செய்யப்பட்டு பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது தற்காலிக பணி நீக்கத்தில் இருக்கும் அவர், கடந்த 26 மாதங்களாக தங்களிடம் வேலை செய்வதாகவும் இதுவரை 5000 டெலிவரிகளை செய்து 4.75/5.00 என்ற உயர்தர மதிப்பீட்டை பெற்ற ஊழியர் என்றும், ஹிடேஸா, காமராஜ் இருவருக்குமே தாங்கள் உதவ முயல்வதாகவும் ஸொமட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நெட்டிசன்களில் பலர் இச்சம்பவத்தின் உண்மை தன்மை அறியப்படவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.