பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி 86 காயங்களுடன் சடலம் - ரூ. 35 ஆயிரத்துக்கு கொத்தடிமை ஆன கதை
குஜராத் மாநிலம் சூரத்தில் உடலில் 86 காயங்களுடன், சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியும், அவரின் தாயும் ரூ. 35 ஆயிரத்துக்குக் கொத்தடிமை ஆக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
சூரத்தின் புறநகர் பகுதியில் உள்ள நீரோடையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 11 வயது மதிக்கத்தக்கச் சிறுமி உடலில் 86 இடங்களில் காயங்களுடன் உயிரற்ற நிலையில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடந்தார். உடற்கூராய்வில் அந்த சிறுமி மோசமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து, ராஜஸ்தானின் மதோபூர் மாவட்டம், கங்காபூரைச் சேர்ந்த ஹர்சாயி குர்ஜார் (35), அவரின் சகோதரர்கள் ஹரிசிங், நரேஷ், அமர்சிங் குர்ஜார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஹர்சாயியும், ஹரிசிங்கும் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை வெள்ளிக்கிழமையன்று போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம், கங்காபூரைச் சேர்ந்த 11 வயது சிறுமியையும், அவரின் தாயையும் ரூ. 35 ஆயிரம் கொடுத்து, டைல்ஸ் கம்பெனி வேலைக்காக, கொத்தடிமையாக அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்களை தங்களின் வீட்டின் அருகே தங்கவைத்து, மிரட்டி பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், தனது குழந்தையை விட்டுவிடுமாறு தாய் கெஞ்சியும்கூட இரக்கப்படவில்லை என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மார்ச் 15-ஆம் தேதி இவர்களை கங்காபூரிலிருந்து அழைத்து வந்த நிலையில், மார்ச் 20-ஆம் தேதிக்கு பின் சிறுமியின் தாய் மட்டும் திடீரென காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சிறுமியை மட்டும் தொடர்ந்து வல்லுறவு கொடுமைக்கு உள்ளாக்கி, ஏப்ரல் 5-ஆம் தேதி அந்தச் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்து, 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஓடையில் வீசிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ஜியாவ்-புத்தியா சாலையில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவேளை அவர், இந்தச் சிறுமியின் தாயாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக மரபணு சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com