அறிமுக போட்டியில் அரை சதம்: கிஷானால் வெற்றியை ருசித்த இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முதலாவது போட்டியில் பெற்ற தோல்விக்கு இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுத்தனர்.
அகமதாபாத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது போட்டியும் அங்கேயே நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இங்கிலாந்து அணியின் பட்லர், புவனேஸ்வர் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் மலனை சஹால் வீழ்த்தினார். ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 46 ரன்களை குவித்தார். அவரையும் பேர்ஸ்டோவையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.
அடுத்து ஆடிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. கே.எல்.ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த இஷான் கிஷான் 32 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய அவர், 5 பவுண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் விளாசினார். இது அவருடைய முதல் சர்வதேச டி20 போட்டியாகும். கேப்டன் கோலி ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். அவர் 5 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் அடித்தார். இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார், சஹால் இருவரும் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் 73 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களை குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆட்டநாயகன் விருதை இஷான் கிஷான் பெற்றார்.