தமிழ்நாட்டில் அடுத்து ஸ்டாலின் ஆட்சிதான்.. சரத்பவார் ஆரூடம்..
தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று சரத்பவார் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் புனே பாரமதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலகளில் அசாம் மாநிலத்தைத் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக தோற்கும். கேரளாவில் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியைப் பிடிப்பார். திமுகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும். மேற்கு வங்கத்தில் மத்திய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து, சகோதரி மம்தா பானர்ஜியை தாக்குகிறார்கள். மேற்கு வங்கத்தின் சுயமரியாதை மற்றும் பெருமையைக் காப்பதற்காக அந்த மாநிலத்து மக்கள் மம்தாபானர்ஜியின் பின்னால் அணிவகுப்பார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு சரத்பவார் கூறினார்.
இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், அந்த பத்திரிகையின் இயக்குனருமான என்.ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். தமிழ்நாட்டில் திமுகவுக்கு சாதகமான அலை வீசுவதாகவும், திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் அதில் அவர் கூறியிருக்கிறார்.